பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதற்கான கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் முன்னிலையில் அதிகாரிகள் கொரோனா உபகரணங்கள் வாங்கியதற்கான செலவு விவரங்களை அளித்தனர். பின்னர் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசுடன் எதிர்க்கட்சிகள் கைகோர்த்து செயல்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கர்நாடக்ததில் கொரோனா பரவத்தொடங்கிய நேரத்தில் முக கவசம், கிருமி நாசினி, கவச உடைகள், வென்டிலேட்டர்களின் உற்பத்தி குறைவாக இருந்தது. அவற்றின் தேவை அதிகமாக இருந்தது. எந்த ஒரு பொருளின் உற்பத்தி குறைவாக இருந்து, அதன் தேவை அதிகமாக இருந்தால் அவற்றின் விலை உயர்வாக தான் இருக்கும். இது எல்லாருக்கும் தெரிந்தது தான்.
அதுபோல தான் கொரோனா பரவல் தொடங்கியதும் முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கொரோனா உபகரணங்களின் தேவை அதிகமாக இருந்தது. அவற்றின் உற்பத்தி குறைவாக இருந்ததாலும், அரசு ஆஸ்பத்திரிகளில் அவற்றின் தேவை அதிகமாக இருந்தாலும், அதிக விலை கொடுத்து சில உபகரணங்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதனால் சில உபகரணங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டது. தற்போது அதன் விலை குறைந்து விட்டது. இதனையே காரணம் காட்டி முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல.
எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா வென்டிலேட்டர்கள் வாங்கியதில் மட்டும் ரூ.40 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஆனால் வென்டிலேட்டர்களை இதுவரை ரூ.10 கோடியே 61 லட்சத்திற்கு தான் அரசு வாங்கி உள்ளது. அதாவது ரூ.5.60 லட்சம் மதிப்பிலான 80 வென்டிலேட்டர்கள் ரூ.7 கோடியே 22 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. மேலும் உயர் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 22 வென்டிலேட்டர்கள் ரூ.3 கோடியே 39 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் சில வென்டிலேட்டர்கள் ரூ.18 லட்சத்து 20 ஆயிரம் வரை விலை இருக்கிறது. சில வென்டிலேட்டர்கள் அதிக தொழில்நுட்பம், நவீனமயமானது என்பதால், தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சில செல்போன்களில் கேமரா உள்ளிட்ட வசதிகள் அதிகமாக இருக்கும். அவற்றின் விலை அதிகமாக இருக்கும். நாம் அவற்றை வாங்க தான் செய்கிறோம். அதுபோல தான் வென்டிலேட்டர்களும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சித்தராமையா கூறியபடி ரூ.10 கோடியே 61 லட்சத்திற்கு வாங்கிய வென்டிலேட்டர்கள் மூலம் ரூ.40 கோடி முறைகேடு பெறுவது சாத்தியமா?.
கொரேனா உபகரணங்கள், மருந்துகள் என சுகாதாரத்துறை மூலம் வாங்கிய ரூ.290 கோடிக்கு அதிகாரிகள் கணக்கு விவரங்களை அளித்துள்ளனர். மத்திய அரசு கூறியபடி 10 நிறுவனங்களிடம் இருந்து மருந்து உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. மைசூருவில் உள்ள நிறுவனத்தில் இருந்து தான் வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் எந்த விதமான முறைகேடு நடக்கவில்லை என்பதை காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறுவதை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ஒரு ரூபாய் கூட முறைகேடு நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் என் மீது கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். எதிர்க்கட்சிகள் என்பதால் அரசு மீது குற்றச்சாட்டுகள் கூறுவதை மட்டும் வாடிக்கையாக வைத்திருக்க கூடாது. இவ்வாறு மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.