மணமேல்குடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளம் தீயணைப்புத்துறையினர் மூலம் பொதுமக்கள் வெளியேற்றம்

மணமேல்குடி அருகே குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்ததால் தீயணைப்புத்துறையினர் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மணமேல்குடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளம் தீயணைப்புத்துறையினர் மூலம் பொதுமக்கள் வெளியேற்றம்
Published on

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விளை நிலங்கள் ஏக்கர் கணக்கில் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட காரக்கோட்டை, நெம்மேலிவயல், இடையாத்திமங்கலம், தண்டலை, மும்பாலை உள்ளிட்ட 26 கண்மாய்கள் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கண்மாய்கள் நிரம்பி உடையும் நிலையில் உள்ளது.

இதனால் கண்மாய்களில் இருந்து உபரிநீரை மதகு வழியாக வெளியேற்றி வருகிறார்கள். இதனால் கிருஷ்ணாஜிபட்டினம் மீனவர் குடியிருப்பு, எம்.ஜி.ஆர்.குடியிருப்பு ஆகிய குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தீயணைப்பு துறையினர் மீட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி தாசில்தார் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஜெகதாப்பட்டினம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் ஆகிய தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு பிள்ளயார்திடல் மற்றும் கட்டுமாவடி பேரிடர் மையங்களில் தங்க வைத்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மணமேல்குடி தாலுகாவில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com