தஞ்சை மாவட்டத்தில், 5 நாட்களாக 100 டிகிரிக்கு குறையாமல் கொளுத்தும் வெயில் - சுட்டெரிப்பதால் மக்கள் நடமாட முடியாமல் அவதி

தஞ்சை மாவட்டத்தில் 5 நாட்களாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதுவும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வந்தாலே பொதுமக்கள் பாடு திண்டாட்டம்தான். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

தஞ்சையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு அச்சப்படும் நிலையே உள்ளது. வெளியில்தான் இந்த நிலைமை என்றால் வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வேலை காரணமாக வெளியில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள குடை பிடித்துக்கொண்டும், துணியால் தலையை மூடிகொண்டும் வெளியில் சென்று வருகிறார்கள்.

பகல் நேரத்தில் தான் வெயிலின் கொடுமை இப்படி என்றால் இரவிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்று அனல் காற்றாகவே வருகிறது. புழுக்கத்தின் காரணமாகவும், வெப்பத்தின் காரணமாகவும் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோடை காலத்தின் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்று தஞ்சை மாவட்டத்தில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் பின்னர் நேற்று வரை 102, 103 104 டிகிரி என வெயில் கொளுத்தி வருகிறது. நேற்றும் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் இதே நிலை தான் நீடித்தது. இதனால் பகல்நேரங்களில் சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்துவதால் அக்னி நட்சத்திரம் முடியும் நாளான வருகிற 29-ந்தேதி வரை இதே நிலை தான் நீடிக்குமோ? என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இருப்பினும் மக்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இளநீர், நுங்கு, பதநீர், வெள்ளரிக்காய், கரும்புச்சாறு, குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை அதிக அளவில் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் அந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com