தேனி மாவட்டத்தில் தந்தை-மகள் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் தந்தை-மகள் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 113 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தேனி, அல்லிநகரம், பெரியகுளம், கம்பம், தர்மாபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

பெரியகுளத்தை சேர்ந்த 70 வயது டாக்டருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருடைய தம்பி, தம்பி மனைவி, மகள் ஆகிய 3 பேருக்கும் நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதுபோல், கம்பத்தை சேர்ந்த தந்தை, மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கம்பத்தை சேர்ந்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக அவருடைய தந்தை கம்பத்தில் இருந்து காரில் சென்றார். சொந்த ஊருக்கு அழைத்து வரும் வழியில் தேவதானப்பட்டி சோதனை சாவடியில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் இருவருக்கும் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், தேனி அல்லிநகரம் அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்த 45 வயது பெண், பாரஸ்ட்ரோடு 6-வது தெருவை சேர்ந்த 48 வயது கூலித்தொழிலாளி ஆகிய 2 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்த பெண் சென்னையில் இருந்து திரும்பி வந்தவர். பாரஸ்ட்ரோட்டை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதுபோல், தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த 39 வயது நபரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளார். அவர் சிறுநீரகத்தில் கல் அடைப்பு தொடர்பான பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 31 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com