படைவீடு ஊராட்சியில் கி.பி.14-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு

படைவீடு ஊராட்சியில் கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.
Published on

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே படைவீடு கிராமம் கி.பி.13-ம் நூற்றாண்டில் சம்புவரையர் மன்னர்கள் ஆண்ட தலைநகராக இருந்து வந்தது. இவ்வூரில் ஏராளமான பழமையான கோவில்கள், சரித்திர சின்னங்களை அவ்வப்போது வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இவ்வூரைச் சேர்ந்த மல்லிகாபுரம் கிராமத்தில் வசிக்கும் காஞ்சீபுரம் சங்கரா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் அ.அமுல்ராஜ், சமூக ஆர்வலர் பாரதிதாசன், ஆரணியைச் சார்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான ஆர்.விஜயன் ஆகியோர் காளிகாபுரம் அரசமரம் கிராமப்பகுதியில் வரலாற்று சின்னங்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசமரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வாயிலின் வெளியே இருபுறமும் பொதுமக்கள் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு செய்த சிலைகளை ஆய்வு செய்தபோது, அவைகள் இரண்டும் கி.பி. 14-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சார்ந்த நடுகற்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான ஆர்.விஜயன் கூறியதாவது:-

போரில் இறந்த வீரர்கள்

கி.பி.13-ம் நூற்றாண்டின் முற்காலம் தொடங்கி சம்புவராய மன்னர்கள் படைவீட்டை தலைநகரமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். அப்போது படைவீடு போர் பயிற்சி செய்யும் படை பாசறையாக இருந்துள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது ஏராளமான நடுகற்களும் வரலாற்றுச் சின்னங்களும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அரசமரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் வாயிற்படியின் இருபுறமும் 2 நடுகற்கள் உள்ளன. இந்த நடுகற்கள் இரண்டும் போரில் வீரத்தை வெளிப்படுத்தி இறந்துபோன வீரர்கள். அவ்வீரர்களுடன் உடன்கட்டை ஏறிய பெண்கள் ஆகியோர் நினைவாக எடுக்கப்பட்டது ஆகும். இது கி.பி. 14-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சார்ந்தது.

செவ்வக வடிவ கேடயம்

மேலும் முனைவர் அமுல்ராஜ் கூறுகையில், படைவீடு பகுதியில் சம்புவராயர் ஆய்வு மையத்தின் சார்பில் இதுவரை பல்வேறு வரலாற்று சின்னங்களை கண்டறிந்து வெளியிட்டிருந்தாலும், கையில் செவ்வக வடிவ கேடயத்துடன் நிற்கும் வீரனின் உருவத்தை இதுவரை நாங்கள் கண்டெடுக்கவில்லை. அந்த வகையில் இங்கு நாட்டப்பட்டுள்ள வீரனின் கையில் செவ்வக வடிவ கேடயம் இருப்பது சிறப்புக்குரியது. இதன்மூலம் சம்புவராய மன்னர்கள் போரில் கேடயத்தை மிக முக்கிய தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தியிருப்பது தெரியவருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com