தேனி நாடாளுமன்ற தொகுதியில், ஓட்டு எண்ணும் பணி 3 மணி நேரம் நிறுத்தம் - வாக்குப்பதிவு எந்திரம் மாறியதாக புகார்

தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரம் மாறியதாக கூறி அ.ம.மு.க., காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் முகவர்கள் புகார் தெரிவித்ததால் ஓட்டு எண்ணும் பணி 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
Published on

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று உள்ளதால் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வேட்பாளர்களின் முகவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த 17 சி படிவத்துடன் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள விவரங்களான எந்திரத்தின் எண், முகவர்களின் கையொப்பம் போன்றவை சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்தனர்.

பகல் 11.45 மணியளவில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்காக அமைக்கப்பட்டு இருந்த 14 மேஜைகளுக்கும் வாக்குப்பெட்டிகள் எடுத்து வரப்பட்டன. 13-வது மேஜைக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியில் 17 சி படிவத்தில் உள்ள எண் 64 என்றும், எந்திரத்தின் எண் 54 என்றும் இருந்தது. அதே நேரத்தில் அந்த எந்திரம் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பெட்டிக்கு வெளியே உள்ள எண் 64 என்று இருந்தது. இதனால் வாக்குப்பதிவு எந்திரம் மாறுபாடாக உள்ளதாக கூறி அ.ம.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர்.

வாக்குப்பதிவு எந்திரம் மாறியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் அங்கு வந்து முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடத்த சம்மதிக்கவில்லை. வேட்பாளர்கள் வந்து அவர்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்று முகவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.,வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து வாக்குப்பெட்டி மாறியதற் கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, சர்ச்சைக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்களை தவிர மற்ற வாக்குப்பதிவு எந்திரங்களை எண்ணுவது என்றும், கடைசியில் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பிற்பகல் 2.45 மணியளவில் உசிலம்பட்டி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.

இதேபோல், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பிற்பகல் 12 மணியளவில் 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது 4-வது மேஜைக்கு எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் சார்ஜ் இல்லை. இதனால் அது அணைந்து இருந்தது. அதில் இருந்த விவரங்களை பெற முடியவில்லை. இதையடுத்து அந்த எந்திரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 1-வது மேஜைக்கு கொண்டு வரப்பட்ட எந்திரத்தில் சீல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், முகவர்கள் கையில் வைத்து இருந்த 17 சி படிவத்தில் இருந்த கையெழுத்துக்கும், எந்திரத்தில் இருந்த கையெழுத்துக்கும் வேறுபாடு இருப்பதாக கூறி வாக்கு எண்ணிக்கையை முகவர்கள் நிறுத்தினர். சுமார் 1 மணி நேரம் தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதே போன்று பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது, 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளில் சீல் இல்லை என்று கூறி தி.மு.க., அ.ம.மு.க. முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் அந்த பெட்டிகளை ஆய்வு செய்த போது, அதன் வெளிப் பகுதியில் சீல் இல்லாமலும், உள் பகுதியில் எந்திரத்தில் சீல் வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. முகவர் கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு இருப்பதையும், 17 சி படிவத்தின் விவரங்களும், எந்திரங்களில் இருந்த விவரங்களும் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதனால் சுமார் 15 நிமிடங்கள் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.

இதுபோன்ற காரணங் களால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனதோடு, வாக்கு எண்ணும் மையத்தில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com