திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போராடி வருகிறது. எனினும் வைரஸ் மக்களிடையே அதிவேகமாக பரவுகிறது. நேற்று ஒரேநாளில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது திருவண்ணாமலை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பழகியவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், வேலை செய்தவர்கள் ஆகியோரின் பட்டியலை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வந்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு.
திருவண்ணாமலை நகராட்சியை சேர்ந்த 2 சிறுமிகள், 5 பெண்கள், 7 ஆண்கள், வந்தவாசியை சேர்ந்த 2 வாலிபர்கள், ஒரு பெண், நாவல்பாக்கத்தை சேர்ந்த 2 பெண், ஒரு ஆண், கிழக்கு ஆரணியை சேர்ந்த 5ஆண்கள், ஒரு பெண். மேற்கு ஆரணியை சேர்ந்த ஒரு முதியவர் உள்பட 4 பேர். பெரணமல்லூரை சேர்ந்த 27 வயது ஆண், ஆக்கூரை சேர்ந்த 28 வயது பெண்.
காட்டாம்பூண்டியை சேர்ந்த பிறந்து ஒரே நாளான பச்சிளம் ஆண் குழந்தை உள்பட 3 பேர், தண்டராம்பட்டை சேர்ந்த 3 பெண்கள், ஒரு சிறுமி, ஒரு ஆண், வேட்டவலத்தை சேர்ந்த இளம்பெண், சிறுமி, கலசபாக்கத்தை சேர்ந்த சிறுவன், மூதாட்டி உள்பட 5 பேர், தெள்ளாரை சேர்ந்த பெண் மற்றும் ராணிப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த வாலிபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 16 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள், காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவர்கள் 4 பேர், மும்பையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 393 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகராட்சி பட்டியலில் தேனிமலை போக்குவரத்து டெப்போவில் வேலை செய்து வந்த கண்டக்டர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார். இவர் உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் பஸ்சில் பயணம் செய்துள்ளார். இவருடன் வேலை செய்த சக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.