தியாகராயநகரில் 50 சதவீத ஊழியர்களுடன் பெரிய கடைகள் திறப்பு ரங்கநாதன் தெரு வழக்கம்போல செயல்பட்டன

சென்னை தியாகராயநகரில் 50 சதவீத ஊழியர்களுடன் பெரிய கடைகள் திறக்கப்பட்டன. ரங்கநாதன் தெருவில் வழக்கம்போல கடைகள் திறந்திருந்தன.
தியாகராயநகரில் 50 சதவீத ஊழியர்களுடன் பெரிய கடைகள் திறப்பு ரங்கநாதன் தெரு வழக்கம்போல செயல்பட்டன
Published on

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையின் வர்த்தக பிரதேசங்களான தியாகராயநகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு விட்டன.

அதேவேளை மிகப்பெரிய ஜவுளிகடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக சாதன விற்பனையகங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்தநிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்து, 5-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வு எதிரொலியாக சென்னையில் பெரிய பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.

சென்னை தியாகராயநகரில் இதுவரை மூடப்பட்டிருந்த தி சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்பட பெரிய ஜவுளிக்கடைகள், செருப்பு கடைகள், கவரிங் நகைக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் முதலியவை நேற்று முதல் செயல்பட தொடங்கின. அரசு அறிவுறுத்தலின்படி, 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இக்கடைகள் செயல்பட்டன. ஏ.சி. எந்திரமும் இயக்கப்படவில்லை.

கடைகளின் முன்பே வாடிக்கையாளர்கள் சோப்பு போட்டு கைகளை கழுவுவதற்காக தனி இட வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடைக்கு உள்ளே செல்லும்போது சானிடைசர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முடிந்தவரை பொருட்களை தொடாமல் பார்க்குமாறு வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்களும் கடைக்காரர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

அதேபோல ரங்கநாதன் தெருவில் சமீபத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளை இழுத்து மூடுமாறு மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என கடைக்காரர்கள் வழங்கிய உறுதியை ஏற்று, கடைகள் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்தது.

அதன்படி தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், செருப்பு கடைகள், அலங்கார பொருட்கள், அழகு சாதன பொருட்கள் கடைகள், கவரிங் நகைக்கடைகள், பொம்மைக்கடைகள் என பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. ரங்கநாதன் தெரு முனையில் தடுப்புகள் அமைத்து சில வியாபாரிகள் அமர்ந்திருந்தனர். தெருவுக்குள் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டும், கிருமிநாசினி தெளித்துமே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com