பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுறுத்தினார்.
Published on

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து பயிற்சி முகாம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகளை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு விதிமுறைகளை பின்பற்றி எடுத்து செல்ல வேண்டும்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1,787 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 141 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். தேவையுள்ள அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் முழு கவனம் செலுத்தி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசினார்.

இந்த பயிற்சி முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com