அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது வேலூர் தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாளை (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Published on

வேலூர்,
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளரான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்தும் போட்டியிட்டனர். வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கான தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் இம்மாதம்(ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் தீபலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். அ.ம.மு.க. வும், மக்கள் நீதிமய்யமும் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள வேலூர் தொகுதி யில் இறுதியாக 10 கட்சிகளை சேர்ந்த 10 பேரும் 18 சுயேச்சைகள் என மொத்தம் 28 பேர் போட்டியிடுகிறார்கள்.

அங்கு அ.தி.மு.க., தி.மு.க. இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

தி.மு.க. சார்பிலும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூர் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மண்டி தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டினார். இறுதிநாளான நேற்று அ.தி.மு.க. சார்பில் மோட்டார்சைக்கிள் பேரணி மூலம் பிரசாரம் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பல்வேறு அமைச்சர் கள் கலந்து கொண்டு பிரசாரத்தை முடித்து வைத்தனர்.

இதேபோல் தி.மு.க. சார்பில் நேற்று மாலை 4 மணியளவில் வேலூர் மண்டித்தெருவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு சிறப்புரையாற்றினார். நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

தேர்தலையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் மேற்பார்வையில் தொகுதி முழுவதும் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. அதை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பாட் எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. பதற்றமானதாக கண்டறியப்பட்ட 133 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறுவதை தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் பொதுப்பார்வையாளர், போலீஸ் பார்வையாளர் கண்காணிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு வைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வேலூர் தொகுதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது அன்று தெரிந்து விடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com