விக்ரோலியில் ஆடு முட்டி சிறுவன் பலி

கோடை விடுமுறையை கழிக்கமும்பை வந்த சிறுவன் ஆடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தான்.
Published on

மும்பை,

மும்பை விக்ரோலி சூர்யாநகர், இஸ்லாம்புரா பகுதியில் வசித்து வருபவர் லியாகத் அலி. டெய்லர். இவரது மகன் சிர்தாஜ் அலி (13). 6-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சிறுவன் வீட்டருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது ஆடு ஒன்று சிறுவனை முட்டியது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலை திடீரென மோசமானது.

இதையடுத்து அவன் மேல் சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். இந்தநிலையில் சிறுவன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான். பிரேத பரிசோதனையில் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- தெருக்களில் அலையும் ஆடுகள் முட்டி ஏற்கனவே பல சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக சிர்தாஜ் அலி உயிரிழந்துவிட்டான். ஆனால் போலீசார் இது விபத்து என கூறி ஆட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறுவன் ஆடு முட்டி உயிரிழந்தது விபத்து தான். சம்பவம் குறித்து விபத்து வழக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெருக்களில் அலையும் ஆடுகளால் பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து மாநகராட்சியிடம் புகார் அளிப்போம் என பார்க்சைட் போலீஸ் அதிகாரி கூறினார். சிறுவனின் தந்தை லியாகத் அலி கூறும்போது:-

எனது மகன் சொந்த ஊரான உத்தரபிரதேசத்தில் உள்ள கிராமத்தில் படித்து வந்தான். கோடை விடுமுறையை கழிக்க ஏப்ரல் 27-ந்தேதி தான் மும்பை வந்திருந்தான். வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்த போது இந்த துரதிருஷ்ட சம்பவம் நடந்துவிட்டது. நாங்கள் இடிந்து போய் உள்ளோம். முதலில் டாக்டர்கள் சிறிய காயம் தான் சரியாகிவிடும் என்றனர்.

பின்னர் உடல் நிலை மோசடைந்து அவனை சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். எனது மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

ஆடு முட்டி சிறுவன் பலியான சம்பவம் விக்ரோலி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com