புதுடெல்லி,
விவசாயிகள் நீண்ட காலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 60 வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய டிராக்டர் களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 23-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் இருந்து பஸ்கள், டிராக்டர்களில் பாரதீய கிசான் யூனியன் என்னும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அதன் தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில் டெல்லி ராஜ்காட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் வழியாக வந்தபோது மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான நேற்று முடிப்பதற்கு விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் வாகனங்களுடன் தேசிய தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தால் சட்டம், ஒழுங்கு சீர்குலையலாம் என்று கருதிய டெல்லி போலீசார், கிழக்கு மற்றும் வட கிழக்கு டெல்லி பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் டெல்லி-உத்தரபிரதேச மாநில எல்லையில் உள்ள காஜியாபாத் நகரிலும் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் தடையை மீறி காஜியாபாத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் ஊர்வலத்தில் வந்தவர்கள் உத்தரபிரதேச போலீசார் சாலையின் நடுவே வைத்திருந்த தடுப்புகளை டிராக்டர்களால் இடித்து தள்ளிவிட்டு டெல்லியை நோக்கி முன்னேறினர்.
அப்போது ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் துணை போலீஸ் கமிஷனர் உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், 20-க்கும் மேலான கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டினர். எனினும், இதையும் மீறி ஊர்வலத்தில் வந்தவர்கள் டிராக்டர்களுடன் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்றனர்.
டெல்லி போலீசார் அவர் களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் விவசாயிகளின் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி ராதாமோகன் சிங், ராஜாங்க மந்திரி கஜேந்திர சிங் செகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
இதைத்தொடர்ந்து முக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மட்டும் டெல்லியில் உள்ள மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைக் கப்பட்டனர். அப்போது விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுபற்றி தங்களுடைய தலைவர் நரேஷ் திகாயத்திடம் தெரிவித்து பதில் அளிப்பதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறினர்.
இதனால் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சார்பில் ராஜாங்க மந்திரி கஜேந்திர சிங், நேற்று மாலை பாரதீய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் இதர விவசாயிகள் சங்க தலைவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், பண்ணைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 6 மாநில முதல்-மந்திரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை விவசாயத்துடன் இணைப்பது பற்றி ஆய்வு செய்யும். 10 ஆண்டுக் கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பழைய டிராக்டர்கள் மற்றும் வாகனங்களுக்கு தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். கிராமப்புறங்களில் பண்ணைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண அதில் உள்ள விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
ஆனால் மத்திய மந்திரியின் வாக்குறுதிக்கு அதிருப்தி தெரிவித்த நரேஷ் திகாயத் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் அதை ஏற்க மறுத்தனர்.
இதுபற்றி பாரதீய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் யுத்வீர் சிங் கூறுகையில், நாங்கள் 11 கோரிக்கைளை மத்திய அரசிடம் வைத்தோம். அவற்றில் 7 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் மிக முக்கியமான 4 கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இந்த நான்கும் நிதி தொடர்பானது என்பதால் இதுகுறித்து பேசவேண்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே எங்களுடைய போராட்டம் தொடரும் என்றார்.
இதனால் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்ட காஜியாபாத் நகரிலேயே ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.
டெல்லியில் நேற்று நடந்த ஊர்வலம் மற்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உடனான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் இருந்தும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் செல்லமுத்து தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் கே.வி. இளங்கீரன், தங்க தர்மராஜன், தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பிரிவு நிர்வாகி பசுமைவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.