ராமநாதபுரத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை, செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 1½ டன் மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
Published on

ராமநாதபுரம்,

முக்கனிகளில் ஒன்றான மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மாம்பழங்கள் கடைகளிலும், சாலை ஓரங்களிலும் குவியல் குவியலாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாம்பழம் மரத்தில் இருந்து பறிக்கப்பட்டு இயற்கையான முறையில் பழுத்த பின்னரே சாப்பிட வேண்டும். அதுதான் தனி ருசி என்பது மட்டுமல்லாமல் உடலுக்கும் நன்மையாகும். ஆனால், வியாபாரிகள் குறுகிய காலத்திலேயே அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் மாம்பழங்களை கார்பைட் கல் கொண்டும், ரசாயன மருந்துகளை தெளித்தும் பழுக்க வைத்து உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

சீசன் முழுமையாக தொடங்கும் முன்னரே இவ்வாறு பழுக்க வைத்து விற்பனை செய்வதால் மவுசை காரணம் காட்டி அதிக விலைக்கு மாம்பழங்களை விற்பனை செய்ய முடியும். இதுபோன்ற மாம் பழங்களை உண்பதால் மனிதனின் உடலுக்கு பல வகையான தீமைகள் ஏற்படுகின்றன. அல்சர், செரிமான கோளாறு, சிறுநீரக கோளாறு, வாயு கோளாறு, வாந்தி, மயக்கம் என தொடங்கி ஒரு கட்டத்தில் புற்றுநோய் ஆபத்தும் ஏற்படும் நிலை உள்ளது.

இதன்காரணமாக இதுபோன்று செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம் பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையை மீறி செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை களை கட்டி உள்ளது. இந்த பழங்களின் ஆபத்தை உணராமல் மக்கள்வாங்கி சென்று சாப்பிட்டு பலவித நோய்களை உடலில் உருவாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் கணேஷ், முத்துச்சாமி, தர்மர், வீரமுத்து, கர்ணன் உள்ளிட்டோர் நேற்று ராமநாதபுரம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதி, அலங்கச்சேரி தெரு, பவுண்டுகடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ குடோன்களில் இந்த சோதனை நடத்தி சுமார் 1 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். இவற்றை உடனடியாக பாதுகாப்பான முறையில் அழித்தனர். இந்த மாம்பழங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படும் மொத்த வியாபாரிகளிடம் இருந்தே கார்பைட் கல்வைத்தும், ரசாயன மருந்து தெளித்தும் பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்ததோடு, இந்த வகை மாம்பழங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com