தளவாய்புரம்,
செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தப்பகுதியில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். இந்த நிலையில் இப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம், வாகன போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் நேற்று செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தடுப்பு வேலிகள் அமைத்து மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தாசில்தார் ரமணன் செட்டியார்பட்டிக்கு விரைந்து வந்து பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேரூராட்சி பகுதியின் அனைத்து முக்கிய இடங்களிலும் இன்று (நேற்று) இரவுக்குள் தடுப்புகள் வைத்து போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.