கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மே 29-ந்தேதி முதல் அணைக்கு வினாடிக்கு 640 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் 40.67 அடியாக உள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 30-ந்தேதி 25.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 294 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 640 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நேற்று முன்தினம் கே.ஆர்.பி. அணைக்கு வினாடிக்கு 433 கனஅடி தண்ணீர் வந்தது. இது நேற்று வினாடிக்கு 384 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது கே.ஆர்.பி. அணையில் உள்ள 7 புதிய மதகுகள் பொருத்தும் பணிகள் நடந்து வருவதால் அணையில் 30 அடி உயரம் மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க முடியும். உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும். அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 30.25 அடியை எட்டியதால், 2 சிறிய மதகின் மூலம் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. பாரூர் ஏரியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்ற காரணத்தால் வலது, இடதுபுற கால்வாய்களை அடைத்து, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com