அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்

உலகம் முழுவதும் 17 கோடியே 20 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Published on

வேலையில்லா திண்டாட்டம்...

நேற்றும் இருந்தது-இன்றும் இருக்கிறது-நாளையும் இருக்கத்தான் செய்யும்.

இது ஒரு தீராத உலகளாவிய பிரச்சினை. இந்தியாவில் மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.

உலகம் முழுவதும் 17 கோடியே 20 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணிக்கை இப்போது மேலும் அதிகரித்து உள்ளது.

1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன் முதலாக 1951-ம் ஆண்டில் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அப்போதைய மக்கள் தொகை 36 கோடியே 10 லட்சத்து 88 ஆயிரம் ஆகும்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் கைக்கு அதிகாரம் வந்து சில ஆண்டுகளேயான அந்த காலகட்டத்தில் உணவு உற்பத்தியை அதிகரித்து வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்பை பெருக்குவது, கல்வி மற்றும் தொழில் வளத்தை மேம்படுத்துவது, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது என்று ஆட்சியாளர்களுக்கு பல பெரிய பொறுப்புகள் இருந்தன.

அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தொழில் தொடங்குவதற்கு தனியாருக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவானதால் ஏராளமானோருக்கு வேலை கிடைத்தது. தொழில் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகியது.

இப்படி வேலைவாய்ப்பு மட்டும் பெருகவில்லை; நாட்டில் மக்கள் தொகையும் பெருகியது. இப்போது 137 கோடியை தாண்டி சீனாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு பெருகிய வேகத்தை விட மக்கள் தொகை பெருக்கத்தின் வேகம் அதிகம் என்பதால், நாட்டில் தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இது ஒரு சமூக பிரச்சினை. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து விட்டு கோடிக்கணக்கான பேர் வேலைக்காக காத்து இருக்கிறார்கள். வேலைக்காக கடுமையாக படித்து போட்டி தேர்வுகளை எழுதுகிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.

2018-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவில் 3 கோடியே 10 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாக மத்திய அரசின் தகவல் தெரிவித்தது. ஆனால் இதுபற்றி மாறுபட்ட கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

வேலையின்மை மற்றும் தகுதி குறைந்த வேலை வாய்ப்புகள் ஆகியவை வரலாறு காணாத உச்சத்தில் இருந்தும், விஞ்ஞான அடிப்படைகளுக்கு முரணான கணக்கெடுப்புகளினால் உண்மையான எண்ணிக்கைகள் வெளியே தெரியாததால் இவை கவனிக்கப்படாமல் தொடர்கின்றன.

இந்தியாவின் சராசரி வேலையின்மை விகிதம் கடந்த 12 மாதங்களாக 7.40 சதவீதத்துக்கும் அதிகமாக தொடர்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக, மாதாந்திர வேலையின்மை விகிதம் 7.5 சதவீதத்துக் கும் சற்று குறைவான அளவில் நிலையாக இருந்தாலும், கடந்த ஆண்டுகளை விட மாதத்திற்கு மாத அடிப்படையில் அதிகமாக உள்ளது.

இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்டு 2019-ல் 8.2 சதவீதமாக உச்சமடைந்த பின், ஜனவரி 2020-ல் 7.16 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரி 2020-ல் முடிவடைந்த 12 மாதங்களுக்கான சராசரி மாதாந்திர வேலையின்மை விகிதம் 7.4 சதவீதமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) நடத்திய வேலையின்மை ஆய்வு கூறுகிறது.

நகர்ப்புறத்தில் உள்ள வேலைக்கு செல்லத் தகுதியானவர்களில் 7.8 சதவீதத்தினர் வேலையில்லாமல் இருப்பதாகவும், இது கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாக இருப்பதாகவும், இதன் மூலம் 2017-18-ல் மொத்த வேலையின்மை விகிதம் 6.1 சதவீதமாக இருந்ததாக தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன. இந்த சமீபத்திய அரசாங்க தகவல்கள், 2019 ஜனவரியில் கசிந்த தேசிய மாதிரி ஆய்வு அலுவலக (என்.எஸ்.எஸ்.ஓ) ஆய்வறிக்கையில், வேலையின்மை 45 ஆண்டு கால உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்ததை உறுதி செய்கிறது.

அரசாங்கம் அளிக்கும் தகவல்களாக இருந்தாலும் சரி, சி.எம்.ஐ.இ. அளிக்கும் தகவல்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் உண்மையான சித்திரத்தை அளிப்பதில்லை. வெளியிடப்பட்ட எண்ணிக்கைகளை விட வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது. வேலையின்மை அச்சமளிக்கும் அளவை எட்டியுள்ளது என்று பொருளியலாளர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகிறார்.

1991-ல் தாராளமயமாக்கல் தொடங்கியது முதல், மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய முதலீடுகளை ஈர்க்க, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் சலுகைகளை அளித்து வருகின்றன. இந்த முதலீடுகள் நவீன தொழில்நுட்பம் மிகுந்த, மிக அதிக மூலதனத்தை கோரும் துறைகளுக்கு சென்றுள்ளன. வேலை வாய்ப்புகளை பெருக்கும் துறைகளுக்கு செல்லவில்லை. நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மை பிரச்சினையை அரசுகள் எதுவும் தீர்க்க முயலவில்லை. அதிகரித்து வரும் இளைய தலைமுறையினருக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க தேவையான ஒரு கொள்கை முடிவுகளை முன்னெடுக்கவில்லை என்கிறார் ஆத்ரேயா.

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முறைசாரா துறை பெரும் பங்களிப்பை செய்து வருகிறது. இந்தியாவில் வேலை செய்யும் மக்கள்தொகையில் பாதி பேர் இத்துறையில் வேலை பெறுகின்றனர் அல்லது தற்காலிகமாக பணிபுரிகின்றனர். பேரழிவை ஏற்படுத்திய பண நீக்க நடவடிக்கை மற்றும் ஒழுங்கற்ற முறையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவை லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்த செய்யும் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் நடத்தும் கடைகளை மூடச் செய்து, அதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சியை முடக்கியது என்கிறார் ஆத்ரேயா.

இந்த இரண்டு கொள்கை முடிவுகளின் தோல்விகளும், இத்துடன் ஆதாய சலுகை சார்ந்த முதலாளித்துவம், வங்கித் துறையில் ஏற்பட்ட பெரும் சிக்கல்கள், உள்கட்டுமானத் திட்டங்களுக்கு தேவையான நீண்ட கால முதலீடுகளை அளிக்க ஒரு வளர்ச்சி வங்கி இல்லாததாலும், இவை அனைத்தும் சேர்ந்து நாட்டில் வேலையின்மை வெகுவாக அதிகரிக்கச் செய்தன.

அதே சமயத்தில் தகுதி குறைந்த வேலைகளில் இருப்பவர்கள் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது. வேலையின்மை பற்றிய தகவல்களை சேகரிக்க ஒரு யதார்த்தமான, விஞ்ஞான பூர்வமான வழிமுறை இல்லாத நிலை இதை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்தியாவின் வேலையின்மை பற்றிய தகவல்கள் யதார்த்தத்தை விட்டு வெகு தூரம் விலகியுள்ளது. ஒருவர் 14 நாட்களில் ஒரு நாள் வேலை செய்தால், அவர் வேலையில் இருப்பவர் என்று கருதப்படுகிறது. உலகில் வேறு எங்கும் வேலையின்மையை அளவெடுக்க இத்தகைய விஞ்ஞானபூர்வமற்ற வழிமுறை பயன்படுத்தப்படுவதில்லை என்கிறார் ஆத்ரேயா.

இந்தியாவின் சமூக-பொருளியல் நிலவரத்தினால், இங்கு ஏழைகள் அதிக நாட்கள் வேலையில்லாமல் வாழ முடியாது. வருமானம் ஈட்ட, பகுதி நேர விவசாய கூலி வேலை, தெருவில் விற்றல், பூ விற்றல் மற்றும் உதவியாளர் பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் சுயமாக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் முழுமையான வேலை வாய்ப்பை பெற்றவர்கள் என்று அரசாங்க ஆவணங்களும் புள்ளி விவரங்களும் கருதுகின்றன.

விவசாயத் துறையில், பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ளனர். இது வாழ்க்கை நடத்த போதுமானதல்ல. பெரும்பாலான நாட்கள் அவர்கள் வேலையில்லாமல் இருந்தாலும், அரசு ஆவணங்கள் அவர்கள் வேலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது!

அவர்களில் எத்தனை பேர் வாழ்க்கைக்கு தேவையான அளவு கூலி பெறுகின்றனர் என்பதே கேள்வி. உண்மை என்னவென்றால் அவர்கள் தங்களின் தகுதிக்கு குறைவான வேலைகளில் இருக்கின்றனர் என்பதால் மிகக் குறைவான வருமானம் அல்லது கூலியை கொண்டு வாழ்க்கை நடத்த சிரமப்படுகின்றனர். எனவே இந்தியாவில் வேலை செய்யும் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் தங்களின் தகுதிக்கு குறைவான வேலைகளில் இருக்கின்றனர். ஆனால் நம் புள்ளி விவரங்களில் அவர்கள், வேலையில் இருப்பவர்கள் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்.

இதற்கு ஏதாவது தீர்வு எங்காவது தென் படுகிறதா? சமீபத்திய பட்ஜெட்டில் வேலையின்மை, கிராமப்புற நெருக்கடிகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் பற்றி நம்பிக்கை அளிக்கும் அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று பெரும்பாலான பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.

கிராமப்புற பொருளாதாரத்துக்குள் அதிக நிதியை செலுத்துவது அரசின் முக்கிய திட்டமாக இருந்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை பெருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருந்தால், அது கிராமப்புறத்தினரிடம் பணம் சேர வகை செய்து, மொத்த பொருளாதார அமைப்பில் தேவைகளை அதிகரிக்க செய்திருக்கும். ஆனால் அரசாங்கம் இந்த மிக முக்கிய திட்டத்துக்கு குறைவான நிதியையே ஒதுக்கியுள்ளது.

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட தொகையை விட வருவாய் வசூல் குறைவாக இருப்பதால், நடப்பு நிதியாண்டில், பெரும்பாலான சமூக பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங் களுக்கு செலவழிக்கப்படும் தொகைகள் குறைந்து, வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை மேலும் பாதிக்கும்.

அரசாங்கம் இதை சரி செய்ய, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அடுத்த நான்கு முதல் ஆறு காலாண்டுகளில் வேலையின்மை விகிதம் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்களும் பொருளியலாளர்களும் கருதுகின்றனர்.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com