

ஜெனீவா,
இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு சர்வதேச விமான சேவைகளும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் நாடு முழுவதும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து பாதிப்பை உடனடியாக கண்டறிய பரிசோதனைகளையும் மத்திய அரசு அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத் தலைவர் பூனம் கேத்ரபால் சிங், ஆரம்பத்தில் இருந்தே கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை அளவை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவமனைகளைத் தயார் செய்தல், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்பாடு செய்தல், சேமித்து வைப்பது உள்ளிட்ட ஆயத்த பணிகளை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
மேலும் கொரோனா பாதிப்பு முந்தைய காலகட்டங்களில் இந்தியா தைரியமான, தீர்க்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என தெரிவித்த அவர், இந்தியாவில் மற்ற நாடுகளை போல பாதிப்புகள் ஒரே மாதிரியாக இல்லை எனவும் சில பகுதிகளில் குறைந்த பாதிப்புகளும் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பெருநகரங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க இந்தியா மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தெரிவித்த அவர், சமூக இடைவெளியை பின்பற்றுதல், ஹாட்ஸ்பாட்களைக் கண்டறிதல் மற்றும் சோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.