டெல்லியில் பிரபல பாஸ்ட் புட் உணவகத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி


டெல்லியில் பிரபல பாஸ்ட் புட் உணவகத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
x
தினத்தந்தி 19 Jun 2024 11:41 AM IST (Updated: 19 Jun 2024 5:08 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரபல பாஸ்ட் புட் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் பர்கர் கிங்ஸ் என்ற பிரபல பாஸ்ட் புட் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் நேற்று இரவு 9 மணியளவில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, உணவகத்திற்குள் வந்த கும்பல் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு நபரை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. 40 முறை துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாஸ்ட் புட் உணவகத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தலைமறைமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஹிமன்சு பாய் பொறுப்பேற்றுள்ளார். போர்ச்சுகலில் தஞ்சமடைந்துள்ள ஹிமன்சு பாய் தானும் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவீன் பாலியும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி, அரியானாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த லாரன்ஸ் பிஷோனி ரவுடி கும்பலுக்கும் ஹிமன்சு பாய் ரவுடி கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது. இதில் ஹிமன்சு பாய் கும்பலை சேர்ந்த சக்தி தாதா என்ற நபரின் கொலைக்கு பழிக்குப்பழி கொலையாக டெல்லி உணவகத்தில் கொலை நடைபெற்றதாக ரவுடி ஹிமன்சு தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story