

புதுடெல்லி,
73-வது குடியரசு தினவிழா கடந்த புதன்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது.குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பை பாசறை திரும்புதல் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
டெல்லி விஜய் சவுக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலாசாரம் பற்றிய லேசர் ஒளிக்காட்சிகள் நடைபெற்றன. சூரிய அஸ்தமன நேரத்தில் படைகள் பாசறை திரும்பும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சி நிறைவு பெறும் தருவாயில் டிரோன் கண்காட்சியும் இடம்பிடித்தது.
இந்த ஆண்டு புதுமையான முறையில் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் தயாரித்த 1000 டிரோன்களின் காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும், கம்பீர அணிவகுப்புடன் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விஜய் சவுக் பகுதியில், இந்திய நிலப்பரப்பு வடிவில் டிரோன்கள் காட்சியளித்தன. முதல் முறையாக இந்தியாவில் தயாரித்த 1000 டிரோன்களை வைத்து கண்கவர் காட்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.