

மும்பை ,
மும்பை செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்ததில் 11 வயது மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பையின் செம்பூர் பகுதியில் இன்று 18 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து மீது திடீரென சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் விழுந்தது. இந்த விபத்தில் விஹான் ஸ்ரீவஸ்தவ் (11) என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக பேருந்தில் சிக்கியிருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 4 மாணவர்கள் நன்றாக இருப்பதாகவும், ஒரு மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆபத்தான நிலையில் இருந்த அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.