பிரதமர் மோடி தலைமையில் நாளை 11-வது நிதி ஆயோக் கூட்டம்

நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் உள்பட அனைத்து மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நிதி ஆயோக்கின் 11-வது கவுன்சில் கூட்டம் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. 'விக்சித் பாரத் 2047' என்ற இலக்கை அடைவதற்கான நோக்கத்தை செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற செயல்திட்டங்களை கொண்டுவருவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகள் மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், மனித மேம்பாட்டு கட்டமைப்பு தொடர்பாக நான்கு முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதாவது, “ அடிப்படை மனித வள மேம்பாடு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப திறன் வளர்ப்பு; உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் பரவலான வளர்ச்சி; சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு; அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கண்ணியம் " ஆகிய நான்கு முக்கிய துறைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.நல்லாட்சிமுறை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, கூட்டாண்மை மற்றும் தரவு அடிப்படையிலான நிர்வாக அமைப்புகள் போன்ற முக்கிய அம்சங்களை பயன்படுத்தி செயல்படுத்தும் வழிகாட்டலை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும்.

மேலும், மாநிலங்களின் வளர்ச்சி நோக்கங்களை தேசிய அளவிலான உள்ளடக்கிய மனித மேம்பாட்டு இலக்குகளுடன் ஒருங்கிணைப்பது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 28 வரை நடைபெற்ற 5-வது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் வழங்கப்பட்ட பரிந்துரைகளும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com