

தோஹா
கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 12 இந்தியர்கள் பலியான சம்பவத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த நிலையில் வளைகுடா நாடுகள், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இதனால், அந்த நாடுகளையும் ஈரான் தாக்கியது.
அதில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதிப்பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனால் பதற்றம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து, கத்தார் அரசு தனது மூடிக்கிடந்த எரிவாயு ஏற்றுமதி முனையத்தை மீண்டும் இயக்கி, உற்பத்தியை தொடங்க திட்டமிட்டது.
இதற்காக, ஊழியர்கள் மற்றும் என்ஜினீயர்கள் அங்குள்ள பர்சான் எரிவாயு வினியோக ஆலையில் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 66 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியுடன் மாயமான தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், கத்தார் நாட்டின் ராஸ் லபான் தொழில் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இந்திய நாட்டினர் உள்பட பலர் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சம்பவம் பற்றி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.
கத்தார் அதிகாரிகளுடன் நம்முடைய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இந்த சோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் குடும்பத்தினருக்கு தூதரகம் உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் நம்முடைய எண்ணங்களும், வேண்டுதல்களும் உள்ளன என்று அவர் தெரிவித்து உள்ளார்.