12-வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 5 பேர் கைது

12-வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி ஜோகேஸ்வரி ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது, ஒருவர் தனியாக சென்ற சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து அங்குள்ள தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது கூட்டாளிகள் 4 பேர் இருந்தனர்.
பின்னர் சிறுமியை மிரட்டி 5 பேரும் கூட்டு பலாத்காரம் செய்தனர். இதன் பின்னர் சிறுமியை வாகனத்தில் அழைத்து வந்து தாதர் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பிசென்றனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் அழுதபடி தாதர் ரெயில் நிலையத்தில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தாள். இதனை கண்டு சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, தான் 5 பேர் கும்பலால் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோகேஸ்வரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் ஜோகேஸ்வரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பலாத்காரம் செய்த கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
தாதர் ரெயில் நிலையம் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில், குற்றவாளிகள் 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. மேலும் அவர்கள் தாதர் ரெயில் நிலையம் அருகே நடமாடியதை கண்ட போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஜோகேஸ்வரியில் பதுங்கி இருந்த மற்ற 3 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர்.






