

புதுடெல்லி
ஆசிய பாரா விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா 114 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இந்த நிலையில், பதக்க எண்ணிக்கை அதிகரித்து உள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் பாரா விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டு துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி ரக்சா கட்சே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 14-ல் இருந்து 114 ஆக அதிகரித்து உள்ளது என்பது நம்முடைய தடகள வீரர்களின் ஆழ்ந்த திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
30 தங்க பதக்கங்கள், 5 உலக சாதனைகள், 9 ஆசிய சாதனைகள் மற்றும் அறிமுக போட்டியாளர்கள் மற்றும் பெண் வீராங்கனைகளின் திறமையான செயல்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்தியா ஆதரவும், உற்சாகமும் அளிக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
இதில் அறிமுக போட்டியாளர்களாக கலந்து கொண்ட 61 பேரில் 36 பேர் பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ளனர் என்றும் பெருமையுடன் சுட்டிக்காட்டி உள்ளார். 56 தடகள வீரர், வீராங்கனைகளில் 34 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அர்ப்பணிப்புடன் செயல்படும்போது எந்தவொரு கனவும் பெரியதல்ல. எந்தவொரு சவாலும் சிறந்ததல்ல என நம்முடைய வீரர், வீராங்கனைகள் நிரூபித்துள்ளனர். வந்து விளையாடுங்கள், புகழ் பெறுங்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.