16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கைது

அபிநந்தன் கவுடா, சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அவரை பட்கல்லுக்கு கடத்தி சென்றுள்ளார்.
கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் அபிநந்தன் கவுடா. இவர் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகா மாங்கி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மங்கி போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

சிறுமி கடத்தல்

இந்த நிலையில் அபிநந்தன் கவுடாவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் செல்போனை பெற்று கொண்டு அவருடன் அபிநந்தன் கவுடா பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் அபிநந்தன் கவுடா, சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அவரை பட்கல்லுக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள தங்கும் விடுதியில் வைத்து சிறுமியை அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது எனவும் சிறுமியை அபிநந்தன் கவுடா மிரட்டி உள்ளார். ஆனாலும் அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போக்சோவில் கைது

இதுபற்றி சிறுமியின் பெற்றொர், பட்கல் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சிறுமிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிநந்தன் கவுடாவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com