

புதுடெல்லி,
தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டெல்லியில் பல இடங்களில் சுவரொட்டியில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
டெல்லியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளால் தலைநகரில் நேற்று பரபரப்பு நிலவியது. இந்த சுவரொட்டிகள் தொடர்பாக நகரின் பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த சுவரொட்டிகளை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
போஸ்டர்கள் அனைத்தும் ஒரே அச்சகத்தில் அச்சிடப்பட்டதா அல்லது ஒருவரோ, அரசியல் கட்சியோ அச்சிட கூறியதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் கூலிக்கு சுவரொட்டி ஒட்டியவர்கள் என்றும் இந்த சுவரொட்டியை அச்சடித்ததன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறியும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.