டெல்லியில் 3-வது நாளாக 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்

அடுத்த அறிவிப்பு வரும் வரை 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் 3-வது நாளாக 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்
Published on

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3-வது நாளாக

தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் கல்வீச்சு போன்ற சம்பவங்களால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் கடந்த 2 நாட்களாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில், மாணவர் போராட்டத்தையடுத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக டெல்லியில் இன்று 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை, 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

17 மெட்ரோ நிலையங்கள்

இதன்படி லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, சுப்ரீம் கோர்ட், சேவா தீர்த்தம், ஜன்பத், ஜாண்டேவலன், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐ.டி.ஓ., டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அதே சமயம் ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் வழக்கம்போல் தொடர்ந்து கிடைக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com