தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.
மைசூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன்காரணமாக அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை, மைசூருவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி விட்டன.
இந்த அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரு அணைகளில் இருந்தும் 2 நாட்களுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால், தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 123.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 887 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 65 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,283.82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 870 கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.
இரு அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 19 ஆயிரத்து 65 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது. இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், காவிரியில் வெள்ளம் குறைந்துள்ளது.






