ரூ.5 ஆயிரத்திற்காக... பாகிஸ்தான் இளம்பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை கசிய விட்ட 2 பேர் கைது

பேஸ்புக் வழியே தொடர்பை ஏற்படுத்தி கொண்ட பாகிஸ்தான் இளம்பெண், இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை கேட்டுள்ளார்.
ரூ.5 ஆயிரத்திற்காக... பாகிஸ்தான் இளம்பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை கசிய விட்ட 2 பேர் கைது
Published on

கார்வார்,

கர்நாடகாவின் கார்வார் நகரில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். கதம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 2 பேர் பாகிஸ்தான் இளம்பெண்ணிடம் இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை கசிய விட்டுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், 2023-ம் ஆண்டு பேஸ்புக் வழியே அந்த பெண் இந்த நபர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். அந்நாட்டின் கடற்படை அதிகாரியாக தன்னை காட்டிக்கொண்டார்.

அவர்களிடம் நட்பை பலப்படுத்திய பின்னர், மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் 8 மாதங்களாக பணம் கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக, போர்க்கப்பல்களின் இயக்கம் உள்பட இந்திய கடற்படையின் ரகசிய தகவல்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் கப்பல் கட்டுமான பணி திட்டங்கள் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார்.

இவர்களும் அந்த பெண்ணிடம் பணத்திற்கு ஆசைப்பட்டு, ரகசிய விவரங்களை கசிய விட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அக்சய் நாயக் மற்றும் வேதன் தண்டேல் ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதன்பின்னர், அவர்கள் 2 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, மாவட்ட கோர்ட்டில் அவர்களை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கடற்படை தளத்தில், இந்தியாவின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்தியா மற்றும் ஐ.என்.எஸ். விக்ராந்த் ஆகிய விமானந்தாங்கி கப்பல்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் பெரிய அளவிலான ரகசிய தகவல்களை திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விவகாரம் இருக்க கூடும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் தீபக் என்பவர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, இவர்கள் இருவரை பற்றிய விவகாரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது என போலீஸ் சூப்பிரெண்டு நாராயண் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com