டெல்லி குருகிராமில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி - 20 பேர் கைது

டெல்லி அருகே குருகிராமில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி குருகிராமில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி - 20 பேர் கைது
Published on

புதுடெல்லி,

டெல்லி அருகே உள்ள குருகிராமில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் போலி கால் சென்டர் நடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள 3 வீடுகளில் கால் சென்டர் இயங்கி வருவது தெரியவந்தது.

3 வீடுகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் லேப்-டாப் மற்றும் செல்போனில் மிகவும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் 'ஹெட்போன்' அணிந்து வாடிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது கால் சென்டர் நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் உரிமம் அல்லது ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலி கால் சென்டர் நடத்தியதாக 4 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 செல்போன்கள், 16 லேப்-டாப்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

இந்த ஆண்டு இந்த நகரில் முடங்கிய ஒன்பதாவது போலி கால் சென்டர் இதுவாகும். இந்த மையம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் உதவி கமிஷனர் (சைபர் கிரைம்) பிரியன்ஷு திவான் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "சந்தேக நபர்கள் ஹேக்கிங் அல்லது மால்வேர் காரணமாக தங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் உள்ள செயலிழப்பு குறித்து பயனரை எச்சரிக்கும் பல்வேறு விற்பனையாளர்கள் வழியாக குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு பாப்-அப் செய்திகளை அனுப்புவது வழக்கம். யாராவது பயனர் பாப்-அப் செய்தியை நம்பி, தொழில்நுட்ப உதவிக்காக அதில் உள்ள கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டால், இணையம் மூலம் குரல் அழைப்பு மையத்தில் கனெக்ட் செய்யப்படும். இங்குள்ள சந்தேக நபர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களாக காட்டப்படுவார்கள்" என்று பிரியன்ஷு திவான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com