

'நீட்' (மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு) வினாத்தாள் கசிவால் இந்தியா முழுவதும் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என புதிதாக தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 6-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அந்த கட்சி போராட்டம் நடத்தியது.இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் கலந்து கொண்டார். இதுதொடர்பாக கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து எங்களின் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
நாங்கள் எங்களின் கல்வி அறிக்கையை வெளியிடுவோம். அது, வினாத்தாள் கசிவுகளைத் தடுத்தல், தேர்வு முடிவுகளை உரிய நேரத்தில் அறிவிப்பதை உறுதி செய்தல், ஆட்சேர்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், தேர்வு அதிகாரிகளின் பொறுப்புடைமையை வலுப்படுத்துதல் மற்றும் தேர்வுகள் நடத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் முறைகேடுகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தவறும் பட்சத்தில் லக்னோ, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.
வரும் 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். இந்தியா முழுவதிலும் இருந்து இளைஞர்களும், மாணவர்களும் டெல்லியில் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்கள். நானும் அந்த போராட்டத்தில் நேரில் பங்கேற்பேன். ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய கல்வி மந்திரியின் ராஜினாமாவைப் பெறும் வரை நாங்கள் திரும்ப மாட்டோம்.அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பதிலாக, எங்கள் சமூக ஊடகக் கணக்குகளை அரசாங்கம் முடக்கி வருகிறது.அரசாங்கம் இளைஞர்களைப் புறக்கணிக்க முடியாது. எங்களை போலிகள் என்று அழைப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.இவ்வாறு அபிஜித் தீப்கே கூறினார்.
தேர்வு தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்ட சமூக ஊடகப் பிரசாரங்கள் மூலம் இந்தக் குழு சமீப வாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், கல்வித் துறையில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் ஒரு இளைஞர் தலைமையிலான தளமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் முயன்று வருகிறது.