இமாசல பிரதேசத்தில் மழைக்கு 26 பேர் பலி - பல இடங்களில் நிலச்சரிவு

இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 26 பேர் பலியாகி உள்ளனர். அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 26 பேர் பலி - பல இடங்களில் நிலச்சரிவு
Published on

சிம்லா,

இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இமாசல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் அங்குள்ள சிம்லா, சோலன், சம்பா, குலு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று காலை 6.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சம்பாவில் 89 மி.மீ., கெய்லாங்கில் 50 மி.மீ., கரபதாரில் 79 மி.மீ., உனாவில் 163 மி.மீ. என பல இடங்களில் கனமழை பெய்திருக்கிறது.

இதனால் மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக புகழ்பெற்ற பியாஸ் நதியில் வெள்ள நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. அங்குள்ள பண்டோ அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், மண்டி மற்றும் குலு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

மலைப்பாங்கான இமாசல பிரதேசத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை எண்-3 மற்றும் எண்-5 போன்ற பிரதான சாலைகள் உள்பட சுமார் 400 சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக நிகழ்ந்து வரும் நிலச்சரிவு, மரங்கள் முறிந்தது, சுவர் இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களில் சிக்கி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளை மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப்போல அண்டை மாநிலமான உத்தரகாண்டிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com