பயங்கரவாதி ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்


பயங்கரவாதி ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்
x
தினத்தந்தி 9 April 2025 4:51 PM IST (Updated: 10 April 2025 12:41 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா வந்தவுடன் ராணாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

புதுடெல்லி:

2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா தொழில் அதிபர் தஹாவூர் ராணாவுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இவர் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹட்லியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

இதற்கிடையே 2009-ம் ஆண்டு தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். லஷ்கர்-இ-தொய்பாவுக்கு ஆதரவு அளித்ததற்காக அவருக்கு அமெரிக்க கோர்ட்டு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

லாஸ்ஏஞ்சல்சில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு உள்ள அவரை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது. இதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனுக்களை அமெரிக்க மாவட்ட கோர்ட்டு, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தன. அத்துடன் அமெரிக்காவில் ராணாவின் சட்டப்பூர்வ வாய்ப்புகள் முடிந்து விட்டன. எனவே, ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது கிட்டத்தட்ட உறுதியானது.

இதற்கிடையே நாடு கடத்துவதற்கு எதிராக ராணா மீண்டும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது இந்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது. அவரது மனுவை கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். அதன்படி இந்திய உளவுப்பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கொண்ட குழு அமெரிக்காவுக்கு சென்றது.

இதுதொடர்பாக அரசாங்க வட்டாரங்கள் கூறும்போது, 'ராணாவை நாடு கடத்துவது தொடர்பாக இந்திய அதிகாரிகள் குழு ஒன்று அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியது. இந்தக் குழு ஆவணங்களை தாக்கல் செய்து, அமெரிக்க அதிகாரிகளுடன் சட்டப்பூர்வ நடைமுறைகளை நிறைவேற்றியது' என தெரிவித்தது.

இந்த நடைமுறைகள் முடிந்த நிலையில், ராணாவை அமெரிக்க அரசாங்கம் இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணாவை இந்திய அதிகாரிகள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருகிறார்கள். அந்த விமானம் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை இந்தியாவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியின் திகார் மற்றும் மும்பையின் ஆர்தர் சாலை சிறைச்சாலையில் உள்ள உயர் பாதுகாப்பு பிரிவுகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணா டெல்லி திகார் சிறை அல்லது மும்பை சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு சிறைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியா வந்தவுடன் ராணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். ராணாவை நாடு கடத்துவது முதல் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவது வரை அனைத்து பணிகளும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

1 More update

Next Story