துப்பாக்கி முனையில் வங்கியில் 27 கிலோ தங்கம், ரூ.12.50 லட்சம் கொள்ளை: போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் கைது

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் போக்கர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கொள்ளை கும்பல் திடீரென புகுந்தது.
நகை, பணம் கொள்ளை; 4 பேர் கைது.
Published on: 

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் வங்கியில் 27 கிலோ தங்கம், ரூ.12.50 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கி முனையில் வங்கியில் 27 கிலோ தங்கம், ரூ.12.50 லட்சம் கொள்ளை

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் போக்கர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் கடந்த சனிக்கிழமை பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கொள்ளை கும்பல் திடீரென புகுந்தது. அவர்கள் அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, வங்கியின் லாக்கரில் இருந்த 27 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை 5 பைகளில் அள்ளிக் கொண்டு, தங்களது மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த கிராம மக்கள்

கொள்ளையர்கள் வெளியேறிய உடனே, உஷாரான வங்கி ஊழியர்கள் அவசர கால அபாய எச்சரிக்கை மணியை அழுத்தினர். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். தங்களது மோட்டார் சைக்கிள்களில் கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்தத் தொடங்கினர். விடாமல் துரத்திய கிராம மக்கள் கொள்ளையர்கள் 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் கைது

முதற்கட்ட விசாரணையில், கைதானவர்களில் முக்கிய சூத்திரதாரி சங்கர் ரமேஷ் ஜசக் (வயது 42) என்பதும், இவர் கடந்த 2023-ம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி என்பதும் தெரியவந்தது. இந்த வங்கியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்யும் தனது உறவினர் ஒருவரின் உதவியோடு, திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அவர் அரங்கேற்றியது அம்பலமானது.

X