2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்

2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அனுமதி மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்பதால் நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் நீரஜ் ஜெயின் கோரினார்.

அதை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, 2ஜி வழக்கு தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களுக்கு 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணை மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தது.

முடித்துவைக்க கோரிக்கை

நேற்று விசாரணை தொடங்கியதும் ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி, சி.பி.ஐ. வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படாததால், அமலாக்கத்துறை வழக்கிலும் விடுதலை கிடைத்தது. வரையறுக்கப்பட்ட குற்றம் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என விஜய் மதன்லால் சவுத்திரி வழக்கிலும், அதைத் தொடர்ந்து இந்திராணி பட்நாயக் வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அதன்படி, சி.பி.ஐ. வழக்கில் விடுவிக்கப்பட்ட நபர்கள் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தானாகே விடுவிக்கப்பட வேண்டும், அமலாக்கத்துறையின் மனுவை முடித்துவைக்க வேண்டும் என வாதிட்டார்.

ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு

அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் நீரஜ் ஜெயின் ஆஜராகி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இருந்த கூட்டு, கட்-ஆப் தேதியை நிர்ணயித்தது, முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற கொள்கையை மீறியது, நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைக்காதது, விசாரணையின்போது கண்டறியப்பட்ட 200 கோடி ரூபாய் ஆகிய 5 முறைகேடுகளும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அடங்கியுள்ளன என்பதை விரிவாக சுட்டிக்காட்டினார். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. தவறான முடிவுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்த சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு சட்டப்படி ஏற்கமுடியாத ஒன்று என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, விசாரணை இன்றும் தொடரும் என தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com