வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி


வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி
x
தினத்தந்தி 13 April 2025 3:59 AM IST (Updated: 13 April 2025 12:19 PM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

கொல்கத்தா,

வக்பு வாரிய திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நீடித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்காள மாநிலம் மால்டா, முர்ஷிதாபாத், தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் திடீரென்று வன்முறை வெடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசினர்.

பஸ் உள்ளிட்ட வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். சாலைகளில் கற்கள், டயர்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினர். மேலும் சில கட்டிடங்களில் இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்தனர். சுட்டி பகுதியில் நடந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான். அவனை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான், மேலும் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இதில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடந்தன. இதையடுத்து அங்கு போலீசார் தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டம் சம்சர்கஞ் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வன்முறை சம்பவங்கள் நடந்த மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பகுதிகளில் பதற்றம் குறைந்து வருகிறது. வன்முறை சம்பவம் தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சுட்டியில் 70 பேரும், சம்சர்கஞ்சில் 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று அவர் கூறினார்.

இதனிடையே மேற்குவங்காளத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா, மம்தா பானர்ஜி போராட்டக்கார்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அவரது அரசு தவறிவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த சூழலில் இறந்தவர்களில், இருவர் மோதல்களில் கொல்லப்பட்டனர் என்றும், ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏ.டி.ஜி.) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார். இதனிடையே ஜாங்கிப்பூரில் மத்தியப் படைகளை அனுப்ப கொல்கத்தா ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story