

டெல்லி,
டெல்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சாவ்ரி பஜார் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த 3 மாடிக் கட்டிடம் இன்று காலை 9 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த கட்டிட விபத்து தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், கட்டிடங்களின் பாதுகாப்புத் தணிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரேகா குப்தா தலைமையிலான அரசும், மாநகராட்சியும் டெல்லியில் உள்ள கட்டடங்களுக்கு பலமுறை பாதுகாப்புத் தணிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் ஊழல் நிலவுவதாகவும், லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களின் கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.