முதியோர்களை தவிக்கவிட்டால் 3 ஆண்டு சிறை; மசோதா கொண்டுவந்தது கேரளா

இனிவரும் காலங்களில் உரிய அரசு பதிவோ அல்லது உரிமமோ இல்லாமல் முதியோர் பராமரிப்பு மையங்களை நடத்தினால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
முதியோர்களை தவிக்கவிட்டால் 3 ஆண்டு சிறை; மசோதா கொண்டுவந்தது கேரளா
Published on: 

திருவனந்தபுரம்,

நாட்டிலேயே முதல்முறையாக முதியோர்களை பாதுகாப்பதற்கான புதிய மசோதா கேரளா சட்டப்பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பெற்ற பிள்ளைகளும், உறவினர்களும் முதியவர்களை பாரமாக நினைத்து கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

சட்டம் சொல்வது என்ன?

இனி முதியோர்களை யாராவது துன்புறுத்தினாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ சட்டம் தன் கடமையை செய்யும். இந்த புதிய சட்டத்தின்படி:

• உடல் அல்லது மன ரீதியாக முதியவர்களை துன்புறுத்துவது பெரும் குற்றம்.

• வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினால் சிறை நிச்சயம்.

• முதியவர்களின் சொத்துகளை ஏமாற்றி அபகரித்தால் சட்டம் பாயும்.

ரூ.50,000 அபராதம்

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட முதியவருக்கு இழப்பீடாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ரூ. 25,000 வரை அபராதம்

இதன்படி, இனிவரும் காலங்களில் உரிய அரசு பதிவோ அல்லது உரிமமோ இல்லாமல் முதியோர் பராமரிப்பு மையங்களை நடத்தினால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ. 25,000 வரை அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்ந்தே தண்டனையாக விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமலுக்கு வருவது எப்போது?

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, அடுத்தகட்டமாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஜனாதிபதி இந்த மசோதாவிற்கு அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்த பிறகு, இந்த புதிய சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரளா அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com