

லக்னோ,
மலையேறுவதற்கு வயது ஒரு தடையே அல்ல என்பதை நிரூபித்துள்ளார் 43 வயதான இந்திய பெண். அவருடைய பெயர் ஷிவானி மெஹ்ரோத்ரா. சிறு வயது முதலே சவால்களை விரும்பும் ஷிவானி, இந்திய சுதந்திர தினமான கடந்த 15-ந்தேதி அன்று 5,642 மீட்டர் உயரம் கொண்ட ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமான ரஷியாவின் 'மவுண்ட் எல்பிரஸ்' மீது ஏறி, மூவர்ணக் கொடியை ஏற்றி சாதனை படைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிவானிக்கு 24 வயதில் லக்னோவில் திருமணம் நடந்தது. தற்போது தனது கணவர் மற்றும் 18 வயது மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். மவுண்ட் எல்பிரஸ் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது குறித்து ஷிவானி கூறியதாவது:-
10 நாட்கள் கொண்ட இந்த மலையேற்றப் பயணம் உடல் வலிமையை விட மன வலிமைக்குத்தான் பெரும் சோதனையாக இருந்தது. 5,000 மீட்டருக்கு மேல் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது. பனிப்பொழிவு, பலத்த காற்று, கடும் குளிர், கனமான உடைகள் என பல சவால்கள் இருந்தன. சிகரத்தை நோக்கி முன்னேறிய போது, “நிற்கக் கூடாது. தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்" என்று எனக்குள் மந்திரம் போல திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டேன்.
எனக்கு 2019-ல் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சென்றபோதுதான் மலையேற்றத்தின் மீது ஆர்வம் வந்தது. அதன்பின் காஷ்மீர், லடாக், இமாசலப் பிரதேசம் என பல இமயமலைப் பகுதிகளில் ஏறியுள்ளேன். பொதுவாக 40 வயதைத் தாண்டிய பெண்கள் மலையேற்றத்திற்கு வருவது மிகக் குறைவு. ஆனால் எனது பெற்றோர், கணவர் மற்றும் மகள் கொடுத்த ஊக்கமே என்னை இந்த உயரத்திற்கு வரவழைத்துள்ளது. மனதில் குறிக்கோள் இருந்தால் எதையும் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.