டெல்லியில் 459 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

கைப்பற்றப்பட்ட சிலிண்டர்களில் 284 இன்டேன் எரிவாயு சிலிண்டர்களும், 175 பாரத் பெட்ரோலியம் சிலிண்டர்களும் அடங்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் 459 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
Published on

புது டெல்லி,

மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னரிமை அளித்தும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கிய நேரத்தில் அமல்படுத்தப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், டெல்லியின் புறநகர்ப் பகுதியான ரன்ஹோலா பகுதியில் எல்பிஜி சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்றதாகக் கூறப்படும் எரிவாயு முகமை உரிமையாளர் (விநியோகஸ்தர்) மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனையின்போது 459 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எச்.பி. பாலாஜி கேஸ் ஏஜென்சியின் உரிமையாளரான சுஷில் குமார் சிங்ஹால் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேமித்து வைப்பதிலும் தவறாகப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், பெரிய அளவிலான பதுக்கல் குறித்த குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. "ரன்ஹோலாவில் உள்ள நிலோதி சாலையில் அமைந்துள்ள எரிவாயு ஏஜென்சியில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு இன்டேன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களுக்குச் சொந்தமான 459 காலி எல்பிஜி சிலிண்டர்கள் மீட்கப்பட்டன". கைப்பற்றப்பட்ட சிலிண்டர்களில் 284 இன்டேன் எரிவாயு சிலிண்டர்களும், 175 பாரத் பெட்ரோலியம் சிலிண்டர்களும் அடங்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு உணவு வழங்கல் அதிகாரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிலிண்டர்கள், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கேஸ் நிறுவனத்தின் பிரதிநிதிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com