

புதுடெல்லி
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இதற்கான மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஏற்கெனவே கட்டிய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய அரசின், கல்வி அமைச்சகத்திற்கு உட்பட்ட உயர்கல்வி துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்துள்ளது.
அவர்களில் 3 பேர் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர்கள். ஒருவர் குருகிராம் மற்றும் மற்றொருவர் நாசிக் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேகத்திற்குரிய பலரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் 5 பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதில், சுபம் கைர்னார் (நாசிக்), யஷ் யாதவ் (குருகிராம்) மற்றும் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த மங்கிலால் பிவால், விகாஸ் பிவால், தினேஷ் பிவால் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கு தி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், மங்கிலாலின் சகோதரரான தினேஷ், உறவினரான யாஷ் உடன் சேர்ந்து நீட் வினாத்தாளை குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு பரவ விட்டு இருக்கிறார்.
இந்த விவகாரத்தில், மிக பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்த கோர்ட்டு, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 7 நாட்கள் சி.பி.ஐ. காவல் விதித்து உத்தரவிட்டது. அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.