

டேராடூன்,
இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத். கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இந்த புனித தளங்களுக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் டேராடூனில் இருந்து புறப்பட்டு, 4 புனித தளங்களுக்கும் சென்றுவிட்டு, பின்னர் டேராடூன் வந்து சேரும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2017 முதல் நடப்பாண்டு வரை, 9 ஆண்டு காலகட்டத்தில் ‘சார் தாம்’ யாத்திரைக்கான ஹெலிகாப்டர் வழித்தடத்தில், இதுவரை 4 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் கடைசியாக இன்று நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்’ நிறுவனத்திற்கு சொந்தமானது.
டேராடூனில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் மலைப்பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதுதவிர, இதே வழித்தடத்தில் நிகழ்ந்த 4 முக்கிய விபத்துகள் பின்வருமாறு;-
ஜூன் 10, 2017 : ‘கெஸ்ட்ரல் ஏவியேஷன்’ நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், ‘சார் தாம்’ வழித்தடத்தில் பத்ரிநாத்-ஹரித்வார் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமான பராமரிப்புப் பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள் மற்றும் 5 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
அக்டோபர் 18, 2022 : ‘ஆர்யன் ஏவியேஷன்’ நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒரு மலை முகட்டில் மோதி விபத்ததிற்குள்ளானது. மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விபத்தில் ஒரு விமானி மற்றும் 6 பயணிகள் உட்பட, ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர்.
மே 8, 2025 : ‘ஏரோ டிரான்ஸ் சர்வீசஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், ‘சார் தாம்’ பயணிகள் சேவையை இயக்கும்போது கங்நானி அருகே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஜூன் 15, 2025 : ‘ஆர்யன் ஏவியேஷன்’ நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி, 5 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.