

புதுடெல்லி
நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.
மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.
இதில், மே மாதம் 10-ந் தேதியுடன் தமிழக அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோன்று, ஜூன் 15-ந்தேதி புதுச்சேரி, மே 7-ந்தேதி மேற்கு வங்காளம், மே 20-ந்தேதி அசாம், மே 23-ந்தேதி கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. மேற்கு வங்காளம் தவிர பிற 4 மாநிலங்களுக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதேபோன்று, அனைத்து 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் (மே 4-ந்தேதி) நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) தலைவர் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கான மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த 5 மாநில தேர்தல்களில், அசாமில் 4 இடங்களில் நாங்கள் போட்டியிடுகிறோம். தமிழகத்தில் 3 இடங்களில் போட்டியிடுவது பற்றி பரிசீலித்து வருகிறோம். அதற்கான வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் தற்போதுதான் தொடங்கியுள்ளன.
கேரளாவில் ஒரு தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம். பிற தொகுதிகளில் என்.டி.ஏ.-பா.ஜ.க. கூட்டணிக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றார். 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.