போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி: கர்நாடக அரசு அறிவிப்பு

1991 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத் துறையால் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.
போக்குவரத்து விதிமீறல்
Published on

பெங்களூரு:

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்தாமல் இருப்பவர்கள் அபராத கட்டணத்தை 50 சதவீத தள்ளுபடியுடன் செலுத்தும் திட்டத்தை கர்நாடக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜூன் 21 முதல் ஜூலை 10 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக போக்குவரத்து போலீசார் கூறியதாவது:

2026 மே மாதத்திற்கு முன்பு காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு, இதுவரை செலுத்தப்படாமல் உள்ள மின்னணு அபராத ரசீதுகளுக்கான தொகையில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மேலும், 1991 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத் துறையால் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.வாகன உரிமையாளர்கள், கர்நாடக மாநில காவல்துறை சேவைகள் செயலி, கர்நாடக ஒன் மையங்கள் மற்றும் அரசு அங்கீகரித்த பிற தளங்கள் மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை செலுத்தலாம்.

நிலுவை வழக்குகளை விரைவாக முடித்து வைப்பதற்காக, கர்நாடக மாநில சட்டப் பணிகள் ஆணையம் வழங்கிய பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் இதேபோன்ற சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் 77 லட்சத்து 41 ஆயிரத்து 50 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சுமார் ரூ.201 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. அதேபோல், போக்குவரத்துத் துறையின் 902 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதன் மூலம் சுமார் ரூ.29.66 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com