

புதுடெல்லி,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, வரி செலுத்துவோருக்கான இணக்கச் சுமைகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கைது செய்யும் அதிகாரத்தை ரத்து செய்ய கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி தொடர்பான நடவடிக்கைகளில் முக்கியமான நடைமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பான குற்றங்களில் குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படுகிறது.
குற்றங்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை நீக்கப்படுகிறது. இனி ஒவ்வொரு வழக்கின் தன்மையையும் கருத்தில் கொண்டு அபராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டையும் விதிப்பது குறித்து நீதித்துறை முடிவு செய்யும்.
குறிப்பிட்ட குற்றங்களுக்கு தனியாக அபராதம் நிர்ணயிக்கப்படாத நிலையில் விதிக்கப்படும் பொதுவான அபராதம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில் தாமதம், தவறுகள் அல்லது வரி செலுத்துவதில் தாமதம் ஏற்படும் நிலையில், வசூல் வட்டி மற்றும் விகிதாச்சார அடிப்படையிலான அபராதம் மட்டுமே விதிக்கப்படும் வகையில் நடைமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் மற்றும் வரி பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறைகளில் வரி செலுத்துவோருக்கு வசதியாக பல்வேறு தளர்வுகளை கொண்டு வர கவுன்சில் முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விகிதம் தொடர்பான விவகாரங்கள் இனி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும், இதற்காக பிரத்யேகமாக நடத்தப்படும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மட்டுமே விவாதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.