

அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே உள்ள ரவுஜா கிராம மேம்பாலத்தில் மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் 2 அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்தன. இரண்டாவதாக சென்ற பஸ் மீது, பின்னால் வந்த ஒரு லாரி மோதியது.அதில் அந்த பஸ் லேசாக சேதம் அடைந்தது.
அதைத் தொடர்ந்து, சேதமடைந்த பஸ், முன்னால் சென்ற பஸ்சின் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்த்திசையில் வேகமாக வந்த ஒரு டிரெய்லர் லாரி, சேதம் அடைந்த பஸ்சின் முன்பக்கத்தில் பலமாக மோதியது. அதில் பஸ் பயணிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்களில் 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார் மேலும் காயமடைந்த பயணிகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.