

கர்நாடகாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகாவின் எஜிபுரா பகுதி அருகே குணேஷ் என்பருக்கு சொந்தமுடைய அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இது 20 வருடம் பழமை வாய்ந்தது. இங்கு 4 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
இத்தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றது. அங்கிருந்து 2 பெண்கள் உள்பட 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களில் கலாவதி (வயது 68) மற்றும் ரவிச்சந்திரன் (வயது 30) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 2 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியின்பொழுது சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.