கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசியக்கொடி பேரணி.. டெல்லியில் 6000 போலீசார் குவிப்பு: அபிஜித் தீப்கே கைதாக வாய்ப்பு

டெல்லியில் அனுமதியின்றி கூடும் கூட்டங்களிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ள போராட்டம், டெல்லியில் போலீசார் குவிப்பு
காவல்துறை அமைத்துள்ள தடுப்புகள்
Published on: 

புதுடெல்லி,

டெல்லி கன்னாட் பிளேசின் சென்ட்ரல் பார்க் பகுதியில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெறும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்திருப்பதால் 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிரமாக போராடி வருகின்றனர். எனவே டெல்லியின் போராட்டக்கள பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வேறு சில இடங்கள் அறிவிக்கப்பட்டன. ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர், தடையை மீறி ஜந்தர் மந்தர் சாலையில் உள்ள தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து போராட்டம் நடத்தினர். அந்த அமைப்பைச் சேர்ந்த சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா தேசியக் கொடியை அசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி தேசியக் கொடியை அசைத்ததாக கைது செய்யப்பட்ட அவர்கள், 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சென்ட்ரல் பார்க்கில் இன்று மாலை தேசிய கொடிகளுடன் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்துள்ளார்.

தேசியக் கொடியை ஏந்துவது குற்றமல்ல என்று கூறிய அபிஜித் தீப்கே, தேசபக்தர்களும், மூவர்ணக் கொடியை நேசிக்கும் அனைவரும் இன்று மாலை 5 மணிக்கு டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியுடன் ஒன்றுகூடவேண்டும் என்றும், அங்கு தேசியக் கொடியை ஏற்றி, மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல என்பதை நிரூபிப்போம் என்றும் கூறினார். டெல்லிக்கு வர முடியாதவர்கள் தங்கள் சொந்த நகரங்களில் மாலை நேரத்தில் மூவர்ணக் கொடி பேரணிக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இந்த போராட்ட முயற்சியால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. தேசியக்கொடி ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெறும் சென்ட்ரல் பார்க் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6,000-க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறையினர், மத்திய ஆயுதப் படைகளின் 220 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரிவான சிசிடிவி கேமரா கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள பேரணியின் போது சட்டம்-ஒழுங்குச் சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, கன்னாட் பிளேஸ், ராஜீவ் சௌக், சென்ட்ரல் பார்க், ஜந்தர் மந்தர், பாலிகா பஜார், அருகிலுள்ள மெட்ரோ நிலையங்கள் மற்றும் நிர்வாக குடியிருப்பு பகுதியான லூட்டியன்ஸ் டெல்லியின் பிற முக்கிய இடங்கள் அனைத்திலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மற்ற மாவட்டங்களிலிருந்து கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

கன்னாட் பிளேஸ், படேல் சௌக், ஐடிஓ மற்றும் சன்சத் மார்க் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பொதுமக்கள் செல்வதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், பல்வேறு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிர்வாகக் காரணங்களுக்காக இன்றும் நாளையும் சென்ட்ரல் பார்க் மூடப்பட்டிருக்கும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேசமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்கள் பொருத்தமான இடத்தில் தேசியக் கொடியை அசைப்பதற்கும், தேசிய கீதத்தைப் பாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்றைய போராட்டத்தில் மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆதரவாளர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் ஊர்வலமாக வரக்கூடிய பாதைகளையும், அருகிலுள்ள சந்தைப் பகுதிகளுக்குள் கூட்டம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளையும் காவல்துறை கருத்தில் கொண்டு கண்காணித்து வருகிறது.

அனுமதி இல்லை

இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், கன்னாட் பிளேஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருங்கூட்டம் கூடுவதை தடைசெய்யும் BNSS சட்டத்தின் பிரிவு 163-இன் கீழ் ஏற்கனவே தடை உத்தரவுகள் அமலில் உள்ளன என்றும் டெல்லி காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி நேஹா யாதவ் கூறினார்.

பெரிய அளவிலான கூட்டங்கள் வியாபாரத்தை பாதிக்கின்றன என்று கன்னாட் பிளேஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சந்தை மற்றும் வர்த்தக சங்கங்கள் கவலை தெரிவித்து, தங்கள் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு கோரி எழுத்துப்பூர்வ கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாக யாதவ் கூறினார்.

அனுமதியின்றி கூடும் கூட்டங்களிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தடை உத்தரவுகளை மீறுபவர்கள் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மாற்று இடம்

"தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராட்டக்காரர்களுக்கு வேறு ஒரு இடத்தில் கொடியேற்றம் நடத்த அனுமதி வழங்க தயாராக இருக்கிறோம்," என்று கூறிய யாதவ், அத்தகைய மாற்று ஏற்பாடு பொருத்தமான இடத்தில் செய்யப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டக்குழுவினர் ஒன்றுகூடினால், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும். சிறைக்கு செல்ல தயாரக இருப்பதாக அபிஜீத் தீப்கே ஏற்கனவே கூறியிருப்பதால், அவர் தடையை மீறி தேசியக்கொடியுடன் பேரணி சென்றால் கைது செய்யப்படலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com