

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை, 26,19,72,014 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா பரவலின் இரண்டு அலைகளிலும், மருத்துவர்களின் உயிரிழப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. கொரோனாவிற்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக செயல்பட்ட மருத்துவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் பலர் குணமடைந்திருக்கும் நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவர்கள் சிலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
அந்த வகையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் (ஐ.எம்.ஏ.) தெரிவித்துள்ளது. அதிலும் பீகார் மாநிலத்திலேயே அதிகளாவிலான மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 115 மருத்துவர்களும், டெல்லியிலும் 109 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 79 பேரும், ஆந்திராவில் 38, தெலங்கானாவில் 37, மகாராஷ்டிராவில் 23, கர்நாடகாவில் 9 மற்றும் கேரளாவில் 24 பேரும், ஒடிசாவில் 31 என்று மொத்தம் நாடு முழுவதும் 730 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.