

பெங்களூரு ,
பெங்களூரு - எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் ரெயிலின் மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 8-ல் இருந்து 16 ஆக அதிகரிக்கிறது.
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரெயில் எண் 26651/26652 கே.எஸ்.ஆர். பெங்களூரு - எர்ணாகுளம் ஜங்ஷன் - கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த நிரந்தர பெட்டி அதிகரிப்பு ஆகஸ்ட் 17, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, பெங்களூருவில் இருந்து புறப்படும் ரெயிலிலும், எர்ணாகுளம் ஜங்ஷனில் இருந்து புறப்படும் ரெயிலிலும் தலா 1 உயர்நிலை இருக்கை வசதி பெட்டி மற்றும் 7 இருக்கை வசதி பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும்.
இதன் மூலம் பயணிகளுக்கான இருக்கை வசதி அதிகரிப்பதுடன், பெங்களூரு - எர்ணாகுளம் இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.
பெட்டி அதிகரிப்புக்குப் பிறகு ரெயிலின் புதிய பெட்டி அமைப்பு:
2 உயர்நிலை இருக்கை வசதி பெட்டிகள்
14 இருக்கை வசதி பெட்டிகள்
மொத்தம்: 16 பெட்டிகள்
இதன் மூலம் தற்போதைய 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், இனி 16 பெட்டிகளுடன் முழுமையாக இயக்கப்படும்.